Site icon Tamil News

செப்டம்பர் 21ஆம் திகதி குவாட் உச்சநிலை மாநாட்டை ஏற்று நடத்தும் அமெரிக்கா

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், செப்டம்பர் 21ஆம் திகதி, ‘குவாட்’ எனப்படும் நான்கு நாடுகள் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டை ஏற்றுநடத்தவிருக்கிறார்.

டெலவேர் நகரில் இந்த மாநாடு நடைபெறும் என்று வெள்ளை மாளிகை வியாழக்கிழமை (செப்டம்பர் 12) தெரிவித்தது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் ‘குவாட்’ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

நான்காவது முறையாக நடைபெறும் இந்த மாநாடு உத்திபூர்வ ஒருங்கிணைப்பு, தடையற்ற, வெளிப்படையான இந்தோ – பசிஃபிக் வட்டாரம் குறித்த ஒருமித்த கருத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது.

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை வரவேற்க அமெரிக்க அதிபர் ஆவலாக இருப்பதாக வெள்ளை மாளிகை அறிக்கை குறிப்பிட்டது.

‘குவாட்’ தலைவர்கள் நேரடியாகக் கலந்துகொள்ளும் இந்த மாநாட்டை அதிபர் பைடன் ஏற்றுநடத்துவது இதுவே முதல்முறை. அவர்களுடனான தமது ஆழமான உறவுகளையும் ‘குவாட்’ அமைப்பின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அவர் இந்த மாநாட்டை ஏற்றுநடத்துவார் என்று வெள்ளை மாளிகை அறிக்கை கூறியது.

சுகாதாரப் பாதுகாப்பு, இயற்கைப் பேரிடர்களைக் கையாளுதல், கடல்துறைப் பாதுகாப்பு, உயர்தர உள்கட்டமைப்பு, பருவநிலை மாற்றமும் பசுமை எரிசக்தியும், இணையப் பாதுகாப்பு போன்றவற்றைக் குறித்துத் தலைவர்கள் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துரையாடுவர் எனக் கூறப்பட்டது.

அடுத்த ‘குவாட்’ உச்சநிலை மாநாட்டை இந்தியா ஏற்றுநடத்தும்.

Exit mobile version