Tamil News

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளது : மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன

கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமை தற்போது வலுவடைந்து உயர்ந்த மட்டத்தில் உள்ளதாக கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன இன்று தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மாத்திரமின்றி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் முதல் நோக்காகக்கொண்டு செயற்பட்டுவருவதாக அவர் மேலும் கூறினார்.

தொப்பிகல பகுதியை அண்மித்த ஈரளக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற விசேட வைபவமொன்றில் பிரதம அதிதியாகக்கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.

தொப்பிகல இராணுவ கட்டளையதிகாரி சந்தன வன்னி நாயக்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது பாடசாலை மாணவர்கள் 58 பேருக்கு கற்றல் உபகரணங்களும் 50 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகளும் வழங்கப்பட்டன.

23 ஆம் படைப்பிரிவு தலைமையதிகாரி மேஜர் ஜெனரல் கேவிஎன்பீ. பிரேமரத்ன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பிரசன்னமாயிருந்தனர்.

கிழக்கு மாகாண இராணுவ கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் ”இலங்கை இராணுவ படையினர் தற்பொது பொதுமக்களின் பாதுகாப்பை மட்டுமன்றி பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் இளைஞர்களின் விளையாட்டுத்துறையினையும் மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்திட்டம் கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது” என்றார்.

Exit mobile version