Tamil News

கனமழையால் கோவையில் திடீரென சரிந்து விழுந்த இருசக்கர வாகன தரிப்பிடத்தின் மேற்கூரை!

கோவையில் கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் மாவட்டத்தின்
பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும் சில இடங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது.

கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை மிதமான மழையும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.

கோடை வெயில் காரணமாக மக்கள் அவதிக்கு உள்ளான நிலையில் தற்பொழுது பெய்து வரும் கோடை மழை குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஓரிரு இடங்களில் பெய்த கன மழையினால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது, சாலையில் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

குறிப்பாக ஆலந்துறை செம்மேடு பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து உள்ளது. அதேபோன்று கவுண்டம்பாளையம் பகுதியில் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் தேங்கி அனைத்து வாகனங்களும் பாதி அளவுக்கு நீருக்குள் மூழ்கின. மேலும் அப்பகுதியில் சென்ற வாகனக் ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில் இன்று பெய்து கொண்டு உள்ள மழையின் காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள இரும்பினால் ஆன மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்களின் ஐந்து இருசக்கர வாகனம் சேதம் அடைந்து உள்ளது.மேலும் அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் அப்பகுதியில் நிற்பது வழக்கம்.இன்று அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் நிற்கவில்லை இதனால் உயிர் சேதம் போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version