Site icon Tamil News

இலங்கையை சுற்றி நடந்து சாதனை படைத்த இளைஞனை சந்தித்த ஜனாதிபதி

இலங்கையைச் சுற்றி 45 நாட்களில் 1500 கிலோமீற்றர் தூரம் நடந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த சஹ்மி ஷஹீத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

இவர் தனது கிராமமான பேருவளையில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்து, நாட்டைச் சுற்றி 1500 கிலோமீட்டர் தூரம் நடந்து இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

அதன்போது பேருவளை, அம்பலாங்டிகொடை, மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, ரன்ன, ஹம்பாந்தோட்டை, வெல்லவாய, மொனராகலை, சியம்பலான்டுவ, பொத்துவில், நிந்தவூர், செங்கலடி, நிலாவெளி, முல்லைத்தீவு, பரந்தன், பருத்தித்துறை, சுன்னாகம், மன்னார், மெதவச்சி, அநுராதபுரம், புத்தளம், கொழும்பு, மாரவில, நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய முக்கிய நகரங்களைக் கடந்து பேருவளைக்குத் திரும்பினார்.

அந்த நடை பயணத்தின் மூலம், இலங்கை அமைதியானது என்பதையும், எந்தவொரு நபரும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நாட்டில் பயணிக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதே அவரது நோக்கமாக இருந்தது.

இச்சந்திப்பில், இந்த இளைஞனின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையைப் பாராட்டிய ஜனாதிபதி, அவருக்கு விசேட நினைவுப் பரிசை வழங்கினார்.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு எதிர்வரும் காலங்களில் அவரின் செயலூக்கமான பங்களிப்பை பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

Exit mobile version