Site icon Tamil News

இரவோடு இரவாக காணாமல் போன குளம் … மர்ம கும்பலை தேடும் பொலிஸார்!

பீகாரில் தண்ணீர் நிரம்பியிருந்த குளத்தில் இரவோடு இரவாக தண்ணீரை இறைத்துவிட்டு மணலை திருடிய கும்பலை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகாரின் தர்பங்கா நகரில் உள்ள கதிராபாத் என்னும் இடத்தில் குளம் ஒன்று உள்ளது. பீகாரில் நல்ல மழை பெய்ததால் அந்த குளத்தில் மழைநீர் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் அந்த குளத்தில் இருந்து மணலைத் திருட திட்டமிட்ட மர்ம கும்பல் செய்த வேலை அனைவரையும். அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

குளத்தில் தண்ணீர் இருப்பதால் மணல் எடுக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அந்த கும்பல், இரவோடு இரவாக மோட்டார் வைத்து குளத்தில் இருந்த நீரை முழுவதுமாக வெளியேற்றி உள்ளது. அதன் பின் அந்த குளத்தில் உள்ள மணலை டிராக்டர்கள் மூலமாக திருடிச் சென்றுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் அங்கு ஆட்கள் நிரந்தரமாக தங்குவதற்காக குளத்துக்குள் அழகான ஒரு குடிசையையும் அமைத்திருக்கின்றனர். பொழுது விடிந்ததும் குளத்தில் இருந்த தண்ணீரையும், மணலையும் காணாமல் திகைத்த அந்த பகுதி மக்கள், காலி இடத்தில் போடப்பட்டிருந்த குடிசையைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். பின்னர் இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

அதையடுத்து அங்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள தர்பங்கா காவல் நிலைய பொலிஸார் குளத்து நீரையும், மணலையும் திருடியவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version