Site icon Tamil News

சென்னையிலிருந்து புறப்பட தயாரான விமானம்… எமர்ஜென்சி கதவை திறந்த இளைஞரால் பரபரப்பு!

சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாரானபோது பயணி ஒருவர், எமர்ஜென்சி கதவினை திறக்க முயன்று அலாரம் அடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து 159 பயணிகளுடன் டெல்லி செல்வதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று இரவு தயாரானது. ஓடுபாதையில் விமானத்தை இயக்க விமானி தயாரானபோது, திடீரென விமானத்துக்குள் அலாரம் ஒலித்தது. இந்த சத்தம், அவசரகால கதவினை திறந்தால் எழுப்பும் அலாரம் என்று தெரியவந்தது. இதையடுத்து விமான பணிப்பெண்கள், அலாரம் வந்த இருக்கையின் அருகே அமர்ந்திருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதற்கு அந்த இளைஞர், பட்டன் வித்தியாசமாக இருந்ததால் அழுத்திவிட்டேன். முதல் முறையாக விமானத்தில் பயணிப்பதால், இதுதான் அவசரகால கதவு திறப்பதற்கான பட்டன் என்று தெரியாது என்று வெள்ளந்தியாக கூறியுள்ளார். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த விமான ஊழியர்கள், அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கி சென்னை விமான நிலைய மேலாளருக்கு தகவல் அளித்தனர். மேலும், அந்த இளைஞரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால், ஒரு மணிநேர தாமதத்திற்கு பிறகு விமானம், டெல்லிக்கு புறப்பட்டது.

அவரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருடைய பெயர் சரோஸ் என்றும் தெரியவந்துள்ளது. நேர்முகத் தேர்விற்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து சென்னை வந்ததும் தெரியவந்துள்ளது. தான் தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர் பொலிஸாரிடம் கெஞ்சியுள்ளார். எனினும் விமான நிலைய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version