Tamil News

சீனாவுக்கு எதிர்ப்பை உணர்த்த கைகோர்த்துள்ள பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான்

சீனாவுக்கு எதிர்ப்பை உணர்த்தும் விதமாக பிலிப்பைன்சும் ஜப்பானும் வரலாற்றுபூர்வ பாதுகாப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளன.இரு நாடுகளும் ஒன்று மற்றொன்றின் எல்லைக்குள் இணைந்து பயிற்சி நடத்த அந்த உடன்பாடு அனுமதிக்கும். அதுபோன்ற பயிற்சி நிகழ இருப்பது முதன்முறை.

கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல் விவகாரத்தில் சீனாவின் ஆதிக்க செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவாக இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்க்க இப்பயிற்சி உதவும் எனக் கருதப்படுகிறது.

மணிலாவில் திங்கட்கிழமை (ஜூலை 8) நடைபெற்ற பரஸ்பர ஈடுபாட்டு உடன்பாட்டில் (ஆர்ஏஏ) கையெழுத்திடும் நிகழ்வை பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் பார்வையிட்டார்.முன்னதாக, மணிலா வந்துள்ள ஜப்பானின் வெளியுறவு அமைச்சர் யோகோ காமிகாவா, பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா ஆகிய இருவரையும் அவர் சந்தித்துப் பேசினார்.

“உங்களது வருகை எங்களது நம்பிக்கையை உயர்த்தி உள்ளது. மேலும், இதுபோன்ற மிகவும் அவசியமான உடன்பாடுகளை எட்டுவதில் ஜப்பானிய அரசாங்கம் கொண்டிருக்கும் முக்கியத்துவத்தையும் உங்கள் வருகை அதிகரித்து உள்ளது.“இந்த நாளில் நாம் அனைவரும் இணைந்திருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்,” என்று ஜப்பானிய அமைச்சர்களிடம் மார்கோஸ் தெரிவித்தார்.

Philippines and Japan sign defence pact amid South China Sea tensions -  News | Khaleej Times

அதற்குப் பதிலளித்துப் பேசிய ஜப்பானிய அமைச்சர் கிஹாரா, ஜப்பானுக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவுகளை புதிய உடன்பாடு பிரதிபலிப்பதாகச் சொன்னார்.மேலும், இருநாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஆற்றலுக்கு வலுவூட்டுவதாகவும் உடன்பாடு விளங்குகிறது என்றார் அவர்.பின்னர், பிற்பகலில் ஜப்பானின் இரு அமைச்சர்களும் பிலிப்பைன்ஸின் வெளியுறவு அமைச்சர் என்ரிக் மானாலோ, பாதுகாப்பு அமைச்சர் கில்பர்டோ டியோடோரோ ஜூனியர் ஆகிய இருவரையும் சந்தித்தனர்.

தற்போதைய இருதரப்பு பாதுகாப்புச் சூழல், கிழக்கு மற்றும் தெற்கு சீனக் கடல் தொடர்பான வட்டார விவகாரங்கள், தைவான் மற்றும் கொரிய நிலவரங்கள் ஆகியன தொடர்பாக அந்த நால்வரும் ஒன்றுகூடி விவாதித்தனர்.

ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகியவற்றின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்களைக் குவிக்கவும் இருநாட்டு வீரர்களும் இணைந்து பயிற்சியில் ஈடுபடவும் தேவையான வழிகாட்டி நெறிமுறைகளை புதிய உடன்பாடு வகுத்துள்ளது.

இதேபோன்ற ராணுவ ஈடுபாட்டு உடன்பாட்டை விஎஃப்ஏ என்ற பெயரில் மணிலாவுடன் அமெரிக்கா ஏற்படுத்தி உள்ளது.அதேபோல, ஆர்ஏஏ என்னும் பரஸ்பர ஈடுபாட்டு உடன்பாட்டை ஜப்பான் ஏற்படுத்தி இருக்கும் மூன்றாவது நாடு பிலிப்பைன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவுடனும் பிரிட்டனுடனும் அந்த உடன்பாட்டில் அது கையெழுத்திட்டு உள்ளது.

Exit mobile version