Tamil News

யாழிற்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி!

3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானம் இன்று வியாழக்கிழமை (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் அனைத்து கல்வி வலயங்களையும் உள்ளடக்கிய 100 பாடசாலை விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தின் கீழ், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவில், 3.2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உடுப்பிட்டி மகளீர் கல்லூரி மைதானம் புனரமைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பாடசாலை அதிபர் இராஜலட்சுமி சுப்பிரமணிய குருக்கள்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் சஜின் டி வாஸ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பேராசிரியர் சமில லியனகே, பாராளுமன்ற உறுப்பினர் சாரதி துஷ்மந்த மித்ரபால, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மேற்கு அமைப்பாளர் தஹாம் சிறிசேன, பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள், பல்வேறுபட்ட சமூக மட்ட நிகழ்வுகளிலும், மக்கள் சந்திப்புகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

Exit mobile version