Site icon Tamil News

சனத் நிஷாந்த பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் சாரதி அளித்த வாக்குமூலம்!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் உயிரிழப்புக்கு மிதமிஞ்சிய வேகத்தில் சாரதி வாகனத்தை செலுத்தியதே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் சனத் நிஷாந்தவின் வாகன சாரதி பிரபாத் எரங்க கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், இராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் விபத்து குறித்து பொலிஸாரிடம் அவர் வழங்கிய வாக்குமூலத்தில், சீக்கிரம் கொழும்புக்கு வரலாம் என்று நினைத்து வந்தோம். அதற்குள் அமைச்சர் தூங்கிவிட்டார். நெடுஞ்சாலையில் எனக்கு முன்னால் இருந்த காரை முந்திச் சென்றேன். நான் ஜீப்பை மீண்டும் வலதுபுறம் உள்ள பாதையில் கொண்டு செல்ல முயன்றபோது, ​​முன்னால் இருந்த கண்டெய்னர் மீது மோதியது.  இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் இருந்த வேலியில் மோதி விபத்துக்குள்ளானது” எனத் தெரிவித்துள்ளார்.

விபத்தின் போது ஜீப் மணிக்கு 200 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் செலுத்தப்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் ஜீப் பலத்த சேதமடைந்தது.

விபத்தின் பின்னர் ஜீப்பில் சிக்கியிருந்த மாநில அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை மீட்க காவல்துறை, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடுமையாகப் போராடினர்.

எவ்வாறாயினும், காயமடைந்தவர்களை ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, ​​இராஜாங்க அமைச்சர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சாரதியின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிவேகமாகச் சென்ற ஜீப் வண்டியை இடதுபுறம் சென்ற காரை முந்திச் சென்றதன் பின்னர் முன்னால் சென்ற கொள்கலனுக்கு இடையில் டயர்களை மாற்ற முற்பட்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தினால் 08 சக்கரங்கள் கொண்ட 40 அடி நீளம் கொண்ட கொள்கலன் வாகனத்தின் பின் பகுதியும் பலத்த சேதமடைந்துள்ளது.

Exit mobile version