Site icon Tamil News

மொட்டுக் கட்சிக்கு மிகுந்த பொறுப்பிருக்கின்றது – மஹிந்த ராஜபக்ச

எதிர்வரும் தேசியத் தேர்தல் வரையில் நிலையான அரசாங்கத்தை அமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கடமை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அரச கொள்கைகளை தற்போது முன்னெடுத்துச் செல்வதாக முன்னாள் ஜனாதிபதி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும் அரச தலைவரும் வேறு ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில், ஒவ்வொரு வாக்காளரும் தாங்கள் வாக்களிக்கும் கட்சியின் வரிக் கொள்கை மற்றும் கடந்த கால பொருளாதார நடைமுறைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல்வேறு பிரச்சார யுக்திகள் மற்றும் சமூக வலைத்தள செயற்பாடுகள் மூலம் மக்களை தூண்டிவிட்டு விசாரணையின்றி அவசரமாக வேறு திசைக்கு கொண்டு செல்லும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவிருக்கும் தேர்தலில் மக்கள் எந்த முடிவை எடுத்தாலும், அது தர்க்கரீதியான சிந்தனை மற்றும் சரியான உண்மைகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாக இருக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சில வாக்காளர்கள் எடுத்த பொறுப்பற்ற தீர்மானங்களின் விளைவுகள் இன்னமும் உணரப்படுவதாகவும், இவ்வாறானதொரு தவறை நாடு தாங்க முடியாது எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version