Site icon Tamil News

காஸா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும்… உலக நாடுகளுக்கு கத்தார் எச்சரிக்கை!

காஸா மீதான குண்டுவெடிப்பு நிறுத்தப்படாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது காஸாவின் ஹமாஸ் அமைப்பு நடத்திய ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதிலடி தாக்குதல்களை கடந்த 6 நாட்களாக நடத்தி வருகிறது. தொடர் ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு காரணமாக காஸா நகரில் கட்டிடங்கள் தரைமட்டமாகி இருப்பதோடு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். உணவு, மின்சாரம், தொலைதொடர்பு போன்றவை இல்லாததால் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வீதிகள் மற்றும் கட்டிடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இஸ்ரேலுக்கு உதவிட தயாராக இருக்கும் வகையில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், காஸா மீதான குண்டுவெடிப்பு நிறுத்தப்படாவிட்டால், உலகிற்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்போவதாக கத்தார் அரசு அறிவித்துள்ளது.

உலகில் எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் 3வது இடத்தில் உள்ள கத்தார், உலகின் மிகப்பெரிய எரிவாயு ஏற்றுமதி நாடாகவும் இருந்து வருகிறது. கத்தாரின் இந்த அதிரடி முடிவால் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது. கத்தாரை தொடர்ந்து எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக்கும் இதே முடிவுக்கு வந்தால், அது பெரும் பொருளாதார நெருக்கடியை உலகம் முழுவதும் ஏற்படுத்தும் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version