Tamil News

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வரலாற்றுக்கால பண்பாட்டு விழுமியங்களுடன் ஆரம்பமானது.

கந்த புராண கால வரலாற்றுடன் தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது.

கதிர்காமத்தின் வரலாற்றுடன் மட்டுமன்றி இங்கு இடம்பெறும் பூஜை முறைகளும் பண்டைய முறைமையை ஒத்ததாகவே காணப்படுகின்றது. அதற்கிணங்க நேற்று ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த திருவிழா பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாகவே நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் திருவிழா தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை திருவிழா ஆரம்பமானது.

கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு திருவிழா நடைபெற்றுவருகின்றது.

விநாயகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, அங்கிருந்து கொடி ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, பூஜைகளுடன் ஆலயத்தின் உட்பகுதியில் கொடியேற்றம் செய்யப்பட்டது.
ஆலயத்தில் கொன்றை மரங்களைக் கொண்டு இந்த கொடியேற்றம் செய்யப்பட்டது. இதன்போது வள்ளி தெய்வானை ஆலயத்திற்கு முன்பாகவும் கொடியேற்றங்கள் செய்யப்பட்டன.

இருபது தினங்கள் நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெறவுள்ளது.

வருடாந்த திருவிழாவின் தீர்த்தோற்சவம் 30ஆம் திகதி மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள தீர்த்தக்கேணியில் நடைபெறும்.

நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.

 

Exit mobile version