Site icon Tamil News

தாய்லாந்தின் புதிய பிரதமராக தக்சின் மகள் – ஆளும் கட்சி வெளியிட்ட அறிவிப்பு

முன்னாள் தாய்லாந்து தலைவர் தக்சின் ஷினவாத்தின் மகள் தாய்லாந்தின் அடுத்த பிரதமர் ஆவதற்கான நேரம் கனிந்து உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தக்சினின் பியூ தாய் கட்சியைச் சேர்ந்த ஸ்ரெத்தா தாவிசின் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வழக்கறிஞர் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்கியதன் மூலம் பிரதமர் பதவிக்குரிய நெறியைப் பின்பற்றத் தவறியதாக நீதிமன்றம் அவர் மீது அந்த நடவடிக்கையை எடுத்தது.அதனைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு அதே கட்சியில் இருந்து ஒருவர் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.

அந்த ஒருவர் தக்சினின் மகளான பேடோங்டார்ன் ஷினவாத், 37, என்றும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) நடைபெறும் கட்சியின் கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் அவரைத் தேர்வு செய்வார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.அவ்வாறு அந்தப் பெண் தேர்ந்து எடுக்கப்பட்டாலும், உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கு நடைபெறும் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில்தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தக்சினின் மூன்று பிள்ளைகளில் ஆக இளையவர் பேடோங்டார்ன். கட்சியின் தலைவராக அவர் செயல்பட்டு வருகிறார்.

11 கட்சிகள் அடங்கிய கூட்டணியில் பியூ தாய் கட்சிதான் ஆகப் பெரியது.

ஸ்ரெத்தாவை அரசமைப்பு நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்த பின்னர் ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பியூ தாய் கட்சி பேடோங்டார்னை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி வருகிறது.

முன்னதாக, அந்தக் கட்சியின் மற்றோர் உறுப்பினரும் முன்னாள் சட்ட அமைச்சருமான சாய்கசம் நிட்டிசிரி, 75, என்பவர் அடுத்த பிரதமர் ஆகக்கூடியவர்களில் முன்னணி வகிப்பவர் என்று ஊடகங்கள் கூறி வந்தன.தக்சினின் மகள் அல்லது முன்னாள் சட்ட அமைச்சர் ஆகிய இருவரில் ஒருவர் பிரதமராகத் தேர்ந்து எடுக்கப்பட்டாலும் ஸ்ரெத்தாவின் நிர்வாகத்தில் பின்பற்றப்பட்ட கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஸ்ரெத்தாவின் நிர்வாகம் வளர்ச்சி மீது கவனம் செலுத்தினாலும் அதன் நிதிக் கொள்கைகள் பலவீனமாக இருந்தன.மேலும், அதிகரித்துவிட்ட வாழ்க்கைச் செலவினத்தையும் வரலாறு காணாத அளவுக்குப் பெரிதாகவிட்ட குடும்பங்களின் கடனையும் சமாளிக்க அந்த நிர்வாகம் போராடியது.

Exit mobile version