Tamil News

சுவிட்சர்லாந்தில் ரெயிலை கடத்திய மர்ம நபர்: பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பயணிகள்

சுவிட்சர்லாந்தில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நின்று கொண்டிருந்த ரெயிலை மர்ம நபர் கடத்தியுள்ளார்.அந்த மர்ம நபர் பயணிகள் மற்றும் கண்டக்டரை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி ரெயிலில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ரெயிலின் கண்டக்டர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் முதலில் வாட்ஸ்அப் மூலம் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் முதலில் ஈரானின் பிரதான மொழியான பார்சி மொழியிலும் அதன் பிறகு ஆங்கிலத்திலும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

Hostage Situation on Swiss Train Ends With Suspect Killed In Police Raid -  News18

இந்த பேச்சுவார்த்தை சுமார் 4 மணி நேரமாக தொடர்ந்த நிலையில், இறுதியில் ரெயிலில் அதிரடியாக பொலிஸார் நுழைந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் கோடாரியால் பொலிஸாரை தாக்க பாய்ந்ததால் வேறு வழியில்லாமல் பொலிஸார் அந்த கடத்தல்காரனை சுட்டுக் கொன்றுள்ளனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர் யார் என்பது குறித்த தகவல்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை. இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version