Site icon Tamil News

நாடு மற்றும் கிரிக்கெட்டின் நிலை இரண்டும் ஒன்றுதான் – சாணக்கியன் எம்.பி

இலங்கை கிரிக்கெட் மற்றும் நாட்டின் நிலை இரண்டும் ஒன்றே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.

கிரிக்கட் அழிவுக்குக் காரணமானவர்கள் இவ்வாறு பேசுவது கேலிக்கூத்தானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நீண்ட காலத்திற்கு முன்பே அமைச்சர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். கிரிக்கெட் மீதான மரியாதையை இலங்கை இழந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி டி சில்வா இருந்த போது நாமல் ராஜபக்ச விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்த தோல்விகளுக்கு தற்போது ஓய்வு பெற்ற மூத்த வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்காமல் தங்கள் சாதனைகளுக்காக விளையாடினர்.

மூத்த வீரர்கள் ஒரேயடியாக வெளியேறும் போது இளம் வீரர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது. எனவே, இதற்கான பொறுப்பை நாம் கூட்டாக ஏற்க வேண்டும்.

மாவட்ட அளவில் கூட கிரிக்கெட் தொடர்பான அதிகாரிகள் தான் உள்ளனர்.எல்லாவற்றையும் இழந்த பின், இந்த மாற்றங்களை செய்ய முயற்சிக்கின்றனர்.

தொலைதூர மாவட்டங்களில் தோல் பந்தைக் கூட தொடமுடியாத திறமையானவர்கள் உள்ளனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version