Site icon Tamil News

இலங்கை மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்

இலங்கையின் பல பகுதிகளில் உஷ்ணத்தின் அளவு தொடர்ந்தும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மனித உடல் அதிகளவில் உணரக்கூடிய வகையில், உஷ்ணத்தின் அளவு அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கமைய, பணியிடங்களில் தொழில்புரிவோர் போதுமான அளவு நீரை அருந்த வேண்டுமெனவும் முடிந்தவரை நிழலான இடங்களில் தமது பணிகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷ்ணமான வானிலை தொடர்பில் வயது முதிர்ந்தவர்கள், நோயாளர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வாகனங்களுக்குள் சிறுவர்களை தனியே விட்டுச்செல்ல வேண்டாமெனவும் அதிக களைப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மட்டுப்படுத்துமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், நிலவும் வறட்சியான வானிலையால் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் , வடிகாலமைப்பு சபை மக்களை கோரியுள்ளது.

வறட்சியான வானிலை இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால் நேர அட்டவணைக்கு அமைய நீர் விநியோகிக்கப்பட நேரிடும் என தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version