Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்!

It is finally holiday! Marked and written holiday in a calendar.

இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

வேதனம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்காளர்களுக்கு, தமது வாக்கினை அளிப்பதற்குச் சந்தர்ப்பத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களின் அலுவலர்களுக்கு, விசேட விடுமுறை தொடர்பான தாபன விதிக்கோவையில், ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தொடர்ச்சியாக 4 மணிநேரம் தேவை என்பதால், அன்றைய தினம் விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் தனியார்த்துறை ஊழியர்களுக்கு அவ்வாறான எழுத்து மூல கட்டளைகள் இன்மையினால், மனித உரிமை ஆணைக்குழு, தொழில் அமைச்சு, தொழில் திணைக்களம் என்பன தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கடந்த காலங்களில் ஏற்படுத்திய உடன்பாட்டுக்கு அமைய, இந்த தேர்தலிலும் அதனைக் கடைப்பிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தனியார்த்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களது சேவை நிலையத்திலிருந்து வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டிய தூரம் 40 கிலோமீற்றர் அல்லது அதற்குக் குறைவாகக் காணப்படுமாயின் அரைநாள் விடுமுறையும், 40 முதல் 100 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தூரம் எனில் ஒருநாள் விடுமுறையும் வழங்கப்படல் வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 100 முதல் 150 கிலோமீற்றருக்கு இடைப்பட்ட தூரத்திற்குச் செல்ல வேண்டியவர்களுக்கு ஒன்றரை நாள் விடுமுறையும் 150 கிலோமீற்றருக்கும் அதிக தூரம் செல்ல வேண்டிய வாக்காளர்களுக்கு 2 நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version