Site icon Tamil News

இலங்கை : ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவதற்காக   கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் அல்லது தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவை கட்சி ரீதியாக ஆதரிப்பார்களா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படாத நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்படி ஜனாதிபதி வேட்புமனுத் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வேட்புமனு தொடர்பில் எதிர்காலத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகவும், இணக்கப்பாடு இன்றி பேச்சுவார்த்தை முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இன்று (28) ஜனாதிபதி மற்றும்   பசில் ராஜபக்ஷவிற்கு இடையில் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பணிமனைகளின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (27) காலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலேயே இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் ஒரு மணித்தியாலம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்குமாறு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் திரு.சாகல ரத்நாயக்க ஆகியோர் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தை திங்கட்கிழமை இடம்பெற்ற அரசியல் பீட கலந்துரையாடலின் பின்னர் அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இங்கு குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version