Site icon Tamil News

பயன்பாட்டிற்கு வந்துள்ள ஸ்மார்ட் மோதிரம் – சரியான முறையில் தெரிவு செய்வது எப்படி?

ஸ்மார்ட் சாதனங்களின் ஆதிக்கம் தற்போது பெருகிவிட்டது. பல ஸ்மார்ட் கேஜெட்டுகள் தற்போது புதிதாக உருவாக்கப்படுகிறது. அதன் வரிசையில் ஸ்மார்ட் ரிங் என்ற சாதனம் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதான் அடுத்த பிரபலமான சாதனமாக மாறப்போகிறது.

உலகமெங்கும் பல நிறுவனங்கள் அவர்களின் ஸ்மார்ட்ரிங்கை அறிமுகம் செய்து வரும் நிலையில், இந்தியாவிலும் போட் மற்றும் நாய்ஸ் நிறுவனங்கள் தங்களின் ஸ்மார்ட் ரிங்கை அறிமுகம் செய்துள்ளனர். இவை நம் வழக்கமாக பயன்படுத்தும் மோதிரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இது நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் வாட்ச் போல நம்முடைய இதயத்துடிப்பு, தூக்கம், ஆக்ஸிஜன் அளவு மற்றும் ஆரோக்கிய விவரங்களைக் கண்காணிக்கிறது.

நாம் அனைவருக்குமே ஸ்மார்ட் வாட்ச் சாதனங்கள் பற்றி பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால் தற்போது சந்தையில் புதிதாக வந்திருக்கும் ஸ்மார்ட் ரிங்கைப் பற்றிய விவரங்கள் அவ்வளவாகத் தெரிவதில்லை. அவற்றைப் பற்றிய விவரங்களை நாம் தெரிந்து கொண்டால்தான், சரியான ஸ்மார்ட்ரிங்கை எப்படி தேர்வு செய்து வாங்கலாம் என முடிவு செய்ய முடியும். எனவே இந்தப் பதிவில் நீங்கள் ஸ்மார்ட்ரிங்கைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி முற்றிலுமாகப் பார்க்கலாம்.

முதலில் ஸ்மார்ட் ரிங்கின் அளவு பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக உங்கள் விரலில் பொருந்தும் அளவான சரியான மோதிரத்தை தேர்வு செய்வது அவசியம். ஸ்மார்ட் ரிங் தளர்வாக இருந்தால் அது உங்களின் விரலிலிருந்து நழுவி விழக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே நேரம் மிகவும் இறுகமாகவும் இதை அணியக்கூடாது. எனவே ஸ்மார்ட் ரிங்கைத் தேர்வு செய்யும்போது சரியான அளவில் உள்ள மோதிரத்தைத் தேர்வு செய்வது நல்லது.

அடுத்தபடியாக இந்த சாதனத்தின் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறைந்த விலையில் கிடைக்கிறது என ஏதோ ஒரு ரிங்கைப் பயன்படுத்தினால், அது நீங்கள் எதிர்பார்த்த அளவீடுகளைக் கொடுக்காது. மேலும் இது எப்பொழுதும் நாம் விரலில் அணியப் போகிறோம் என்பதால், பல கடினமான சூழ்நிலைகளையும் தாங்குவதற்கு வலுவான தரம் தேவை. இதில் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் சிறிய தாக்கங்களையும் எதிர்கொள்ளாமல் எளிதில் உடைந்து விடும்.

நீங்கள் வாங்கும் ஸ்மார்ட் ரிங் வாட்டர் ரெசிஸ்டன்ட்டாக இருப்பது மிக முக்கியம். அதை அணிந்து கொண்டு ஒரு நாளில் பலமுறை கை கழுவுவது, தண்ணீரில் ஏதாவது வேலை செய்வது என பல சூழ்நிலையை நாம் சமாளிக்க வேண்டி இருக்கும். எனவே அது தண்ணீர் உட்புகா வண்ணம் இருப்பது நல்லது.

குறிப்பாக ஸ்மார்ட் ரிங்கின் பேட்டரி ஆயுளில் கவனம் செலுத்துங்கள். ஏனெனில் ஒரு நாளில் பலமுறை அதை சார்ஜ் செய்வது நமக்குத் தொந்தரவை ஏற்படுத்தும். குறைந்தது ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒரு வாரம் முழுவதும் பேட்டரி ஆயுள் வரும்படியான ஸ்மார்ட் ரிங்கைத் தேர்வு செய்யுங்கள்.

இறுதியாக அதன் துல்லியத்தன்மை மற்றும் பயன்பாட்டு ஆதரவு நன்றாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்களின் ஆரோக்கியத்தை கவனிக்க ஸ்மார்ட் ரிங் வாங்குகிறீர்கள் என்றால், அதன் துல்லியத்தன்மை சரியாக இருக்க வேண்டும். அதேசமயம் நீங்கள் வாங்கும் இந்த சாதனத்தில் டிஸ்ப்ளே இருக்காது. எனவே இதன் அளவீடுகளை உங்கள் ஸ்மார்ட் போனில் எளிதாகப் பார்க்கக் கூடிய அம்சம் உள்ளதா என்பதையும் கவனியுங்கள்.

 

Exit mobile version