Site icon Tamil News

சீனாவில் பூங்கா ஒன்றில் கூரை இடிந்து விழுந்ததால் அறுவர் உயிரிழப்பு!

சீனாவின் கிழக்குப் பகுதியில் மின்னல் தாக்கியதால் பூங்கா ஒன்றில் இருந்த கூரை இடிந்து விழுந்தது.

அச்சம்பவத்தில் அறுவர் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமுற்றனர். சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகங்கள் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 12) இத்தகவல்களை வெளியிட்டன.

ஜியாங்சு மாநிலத்தில் உள்ள சாங்ஸூ நகரில் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 11) கூரை இடிந்து விழுந்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. காயமடைந்த 10 பேர் சீரான நிலையில் இருப்பதாகவும் விபத்து குறித்து விசாரணை தொடர்வதாகவும் சிசிடிவி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இவ்வாண்டு கோடை காலத்தில் சீனா மோசமான வானிலையை எதிர்நோக்கி வருகிறது. அந்நாட்டின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, வடக்குப் பகுதிகளை அனல்காற்று தொடர்ந்து வாட்டி வருகிறது.

கடந்த ஜூலை மாதம் கனமழை காரணமாக சீனாவின் ‌ஷான்சி மாநிலத்தில் விரைவுச்சாலை பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. அச்சம்பவத்தில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர்.

பருவநிலை மாற்றம், இத்தகைய மோசமான, கடுமையான வானிலை நிகழ்வுகளை அதிகம் இடம்பெறச் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Exit mobile version