Tamil News

யாழ் பல்கலையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தாவரவியல் துறைத் தலைவர் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாகப்  பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும், புள்ளிவிபரவியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன் மற்றும் கலைப் பீடத்தின் கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) ஜே.இராசநாயகம் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழகப் பேரவை இன்று (25.11) ஒப்புதல் வழங்கியது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் படி, தாவரவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன் தாவரவியலில் பேராசிரியராகவும், கணிதவியலும் புள்ளிவிபரவியலும் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.கண்ணன் கணிதவியலில் பேராசிரியராகவும், கல்வியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி (திருமதி) ஜே.இராசநாயகம் கல்வியியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version