Tamil News

வாழ்க்கையை மாற்றிய போன்கால்.. காதல் தோல்வி குறித்து மனம் திறந்த எஸ்.ஜே. சூர்யா

நடிப்பு அசுரன் என பட்டம் பெற்ற எஸ்ஜே சூர்யா தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம் தான் காரணம் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

90களின் இறுதியில் இயக்குநராக தடம் பதித்த எஸ்.ஜே.சூர்யா இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவராக இருக்கிறார். வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் பிளாஸ் பஸ்டர் ஹிட்டடித்து, அஜித் – சிம்ரன் – எஸ்.ஜே.சூர்யா என மூவருக்குமே ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார். தமிழில் வெற்றிபெற்ற இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்போதும் விஜய்யின் திரை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது.

அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த எஸ்.ஜே.சூர்யா நியூ என்ற ஒரு வித்தியாசமான படத்தை இயக்கி அதில், ஹீரோவாக நடிக்கவும் செய்தார். சிம்ரன் நாயகியாக நடித்த இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்டடிக்க படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அன்பே ஆருயிரே என்ற படத்தையும் இயக்கி நடித்தார். இப்படத்தின் பாடல்களும் வெற்றிப்பெற்றன.

இதன் பின் கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி என பல படங்களில் நடித்தாலும் இவை அனைத்தும் பெயர் சொல்லும் அளவிற்கு இல்லாததால், சிறிது காலம் சினிமாவில் தென்படாமலே இருந்த எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் அவருக்கு பெயரை பெற்றுத்தந்தது. அதன் பிறகு எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். சிம்புவின் மாநாடு படத்தில், தலைவரே.. தலைவரே என்று அவர் பேசும் வசனம் பெரும் வைரலாகி அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது.

மார்க் ஆண்டனி, ஜிகார்தாண்டா டபுள் எக்ஸ் என மாஸ் காட்டி வரும் எஸ்ஜே சூர்யா திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருப்பதற்கான காரணத்தை சொல்லி உள்ளார். அதில், அன்பே ஆருயிரே படக்கதையும் என் காதல் கதையும் ஏறக்குறைய ஒன்னு தான். அதனால் தான் அந்த கதையை எடுத்தேன். என்னுடைய உண்மையான காதல் கதையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அந்த படத்தை பாருங்க என்றார்.

மேலும்,இரவு விருந்துக்காக என் காதலி ஏற்பாடு செய்திருந்தார். அந்த நேரத்தில் தான் ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து எனக்கு போன் வந்தது, இப்போது தான் ப்ரீயா இருக்கேன் உடனே பேச வாங்க என்றார்.

நான் உடனே என் காதலியிடம் அவசரமான வேலை இருக்கிறது என்று சொல்விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். இரவு 12 மணி வரை மீட்டிங் இருந்தது. அதை முடித்துவிட்டு காதலியின் வீட்டுக்குச் சென்று கதவை தட்டினே, அப்போது அவள், இது ஒன்றும் சத்திரம் இல்லை என்று சொல்லி முகத்தில் அடித்தது போல கதவை மூடிவிட்டார்.

அப்போது மூடப்பட்ட என் இதயம் இப்போது வரை மூடியே இருக்கிறது என்று தனது வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வியை பகிர்ந்திருக்கிறார்.

Exit mobile version