Site icon Tamil News

முடிவுக்கு வருகிறதா உக்ரைன் – ரஷ்ய போர்! களமிறங்கும் வல்லரசுகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உதவி செய்வதாக இருவரும் உறுதியளித்துள்ளனர்.

உக்ரைன் – ரஷ்யா போர் கடந்த 15 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனவே போரை நிறுத்தும்படி பல நாடுகள் வலியுறுத்தின. அதேபோல் ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவும் இந்த போரை நிறுத்த உதவுவதாக உறுதியளித்தன.

அதன்படி ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து சீன அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. மாறாக இரு நாடுகளும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான ககோவ்கா அணை உடைந்து பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

மேலும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில் அரச பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரிஷி சுனக் பிரதமரான பின்னர் மேற்கொள்ளும் 4-வது சந்திப்பு இதுவாகும். சந்திப்பின்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர உதவி செய்வதாக இருவரும் உறுதி அளித்தனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கியதில் இந்த இரு நாடுகளும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

மேலும் உக்ரைன் ராணுவத்தினருக்கு போர்ப்பயிற்சியையும் இவர்கள் அளித்தனர். தற்போது அவர்களே போரை முடிவுக்கு கொண்டுவர உதவி செய்வதாக உறுதி அளித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது

Exit mobile version