Site icon Tamil News

ரஷ்யா தேர்தல் 2024: வாக்குப்பதிவுகள் ஆரம்பம்- புடின் வெற்றி நிச்சயம்!

ரஷ்ய அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடின் இன்னும் 6 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார் என்பது உறுதியாகி உள்ள நிலையில், வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

71 வயதான விளாடிமிர் புடின், கடந்த டிசம்பரில் நடந்த மாபெரும் ராணுவ விருது வழங்கும் விழாவில் தான் ஐந்தாவது முறையாக அதிபர் தேர்தலில் நிற்பதாக ரஷ்ய மக்களிடம் தெரிவித்தார்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு மூன்று நாட்ககள் நடைபெறும்.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள வாக்குச் சாவடிகள் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கு (வியாழன் 20:00 GMT) திறக்கப்பட்டு, இறுதியாக ஞாயிற்றுக்கிழமை 20:00 மணிக்கு மேற்குக் கலினின்கிராட் எக்ஸ்கிளேவில் மூடப்படும்.

தேர்தலுக்காக நாடு முழுவதும் 1 லட்சம் வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. சில இடங்களில் வீடுகளுக்கே சென்று வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

மேலும் வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் வாக்குகளை பதிவு செய்யும் முறை முதல் முறையாக நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது.

இன்று தொடங்கிய தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மக்கள் வாக்குசாவடி மையங்களுக்கு ஆர்வமுடன் சென்று தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர்.

சில இடங்களில் வாக்குபெட்டிகள் நேரடியாக வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு ஓட்டுபதிவு நடந்தது. மேலும் போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புடின் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். நிகிலை கரிடோனோவின் கம்யூனிஸ்டு கட்சி, லியோநிட் ஸ்லட்ஸ்கியின் தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, விளாடிஸ்லா தவன்கோவின் புதிய மக்கள் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.

ஆனால் புடினை எதிர்த்து போட்டியிட வலுவான வேட்பாளர் இல்லை என்பதால் அவர் 5-வது முறையாக அதிபராக வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

புடினுக்கு எதிரான தலைவர்கள் சிறைகளிலோ, வெளிநாடுகளிலோ இருப்பதாலும், உக்ரைன் போர் மற்றும் துணை ராணுவப் படையான வாக்னர் குழுவின் ஆயுதக் கிளர்ச்சிக்கு இடையிலும் புடினுக்கு மக்களிடையே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

அவரை கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி சிறையில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அதிபர் தேர்தலில் (2018-ம் ஆண்டு ) புதின் 76.7 சதவீத வாக்குகள் பெற்றிருந்தார். அரசியல் சாசனத் திருத்தத்தின்படி புடினால் வரும் 2036-ஆம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராகத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநிலத்தில் உள்ள ரஷ்ய சிறப்பு தூதரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version