Site icon Tamil News

தலைநகர் கீவ் மீது ரஷ்யா குண்டு வீச்சு – இருவர் பலி!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதல் நடத்தத் தொடங்கியது. இதற்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. மேலும் உக்ரைனுக்கு பொருளாதார உதவிகள் மற்றும் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகின்றன. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிராக போரிட்டு வருகிறது.

இந்தநிலையில் இன்று காலை, உக்ரைன் தலைநகர் கீவ் மீது வான்வழியாக குண்டுகள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார்.

உயிரிழந்தோரின் உடல்கள் கட்டிட இடிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அந்த குண்டுவீச்சு சம்பவத்தில் கண்ணாடிகள் சிதறி ஒருவர் காயமடைந்ததாகவும் மேயர் கிளிட்ச்கோ கூறினார். மேலும், இந்த குண்டுவீச்சில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வான்வெளி தாக்குதல் ஆளில்லா விமானங்களிலிருந்து வந்ததா வேறு வகைகளில் வீசப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் கிளிட்ச்கோ கூறினார்.

Exit mobile version