Site icon Tamil News

இலங்கையில் மத நம்பிக்கையால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

இலங்கையில் குழந்தைகளுக்கு “தட்டம்மை தடுப்பூசி” போடுவதை சிலர் தவிர்ப்பதால் அம்மை நோய் மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மத நம்பிக்கை காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதற்கமைய, வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்திற்குப் பிறகு 2019 ஆம் ஆண்டில் நாட்டிலிருந்து தட்டம்மை நோய் இல்லாதொழிக்கப்பட்டது. அதன்படி தெற்காசியாவில் தட்டம்மை நோயை இல்லாதொழித்த 5 நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகிறது.

இந்நிலையில் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் 15 குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் அவர்களில் 7 பேருக்கு தட்டம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் தட்டம்மை தடுப்பூசி போடப்படாத குழந்தைகள் என தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் சுவாசக் குழாய் வழியாக உடலுக்குள் நுழைந்து சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் தோன்றும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காய்ச்சல், சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் கண் சிவத்தல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். சில மத நம்பிக்கைகள் காரணமாக தடுப்பூசி போடுவதை சிலர் தவிர்ப்பதால் அம்மை நோய் பரவும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Exit mobile version