Site icon Tamil News

ஜெர்மனில் கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய உண்மையான சந்தேக நபர் கைது

மேற்கு ஜெர்மானிய நகரமான சோலிங்கனில் மூவர் மீது கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மாநில அதிகாரி ஒருவர் ஜெர்மன் தொலைக்காட்சியிடம் ஆகஸ்ட் 24ஆம் திகதி தெரிவித்தார்.

கைது நடவடிக்கைக்குப் பிறகு தமக்குச் சற்று ஆறுதலாக இருப்பதாக நார்த் ரைன் வெஸ்ட்பாலியாவின் உள்துறை அமைச்சர் ஹெர்பர்ட் ரியுள் ‘ஏஆர்டி’ தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார்.

முன்னதாக, ஆகஸ்ட் 23ஆம் திகதி எண்மரைக் காயப்படுத்திய கத்திக்குத்துத் தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

ஒரு நாள் முழுக்க காவல்துறையினர் மனித வேட்டையில் இறங்கி இரண்டு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இருப்பினும், அவர்கள் அநேகமாகக் குற்றவாளி அல்லர் என்று ரியுள் குறிப்பிட்டார்.

“இப்போது நாங்கள் கைது செய்திருப்பவரே உண்மையான சந்தேக நபர்,” என்று அவர் கூறினார். 26 வயதுடைய அந்த நபரிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பாலஸ்தீனம் மற்றும் உலகின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்குப் பழிவாங்கவே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு அதன் டெலிகிராம் கணக்கில் பதிவிட்டது.இந்நிலையில், தாக்குதல் நடந்தபோது களைகட்டி இருந்த வார இறுதி விழாவைத் தொடராமல் ரத்து செய்தனர் அதிகாரிகள்.

Exit mobile version