Site icon Tamil News

உக்ரேன், ர‌ஷ்யா இடையே மீண்டும் அமைதியை கொண்டுவரத் தயார்: இந்தியா

ர‌ஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே மீண்டும் அமைதியைக் கொண்டுவருவதில் ஆக்ககரமான முறையில் பங்காற்றத் தயாராய் இருப்பதாக இந்தியா வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) அறிவித்தது.எனினும், இதன் தொடர்பில் எப்போது, எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற அம்சங்களைப் பொறுத்தவரை ர‌ஷ்யாவும் உக்ரேனும்தான் முடிவெடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா, ர‌ஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவது, உக்ரேன் தொடர்பில் நடைபெற்ற முதல் அமைதிக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில் இந்தியா கையெழுத்திடாமல் இருக்க முடிவெடுத்தது ஆகியவற்றை உக்ரேனிய அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி அண்மையில் விமர்சித்துப் பேசினார். அதுகுறித்து அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை எனும் வகையில் இந்திய வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ரந்தீர் ஜைஸ்வல் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜூலை மாதம் ர‌ஷ்யாவுக்கும் சென்ற வாரம் உக்ரேனுக்கும் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெறக்கூடிய சமரசப் பேச்சுவார்த்தையில் இந்தியா எவ்வாறு பங்காற்றக்கூடும் என்பது குறித்து அரசதந்திர வட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவரம் தெரிந்த சிலர், நேரடியாக சமரசம் செய்வதற்குப் பதிலாக இரு தரப்புக்கும் இடையே தகவல்களை வழங்குவதையே புதுடெல்லி விரும்புகிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த விவரத்தை வெளியிட்டோர் தங்களின் அடையாளத்தைத் தெரிவிக்க விரும்பவில்லை.

“பேச்சுவார்த்தையின் மூலம் இந்தப் பூசலுக்கு உகந்த தீர்வுகாணும் நோக்கில் ஆக்கபூர்வமான, தீர்வை அடிப்படையாகக் கொண்ட நடைமுறைக்கு ஏற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பதே எங்கள் அறிவுரையாக இருந்து வருகிறது,” என்றார் ஜைஸ்வல்.

“ஆக அதிகாரபூர்வ நிலையில் நாங்கள் ர‌ஷ்யா, உக்ரேன் இரு தரப்பையும் தொடர்புகொண்டிருப்பது அதற்குக் சான்று. அமைதி கொண்டுவருவதன் தொடர்பில் ஆக்ககரமான முறையில் பங்காற்ற இந்தியா தயாராய் இருக்கிறது என்று பிரதமர் மோடி ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ர‌ஷ்யா-உக்ரேன் பூசலை முடிவுக்குக் கொண்டுவந்து மீண்டும் அமைதி நிலவுவதற்கான குறிப்பிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துரைப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்றும் ஜைஸ்வல் எடுத்துச் சொன்னார்.

Exit mobile version