Tamil News

புதுச்சேரி – 4 நாட்களுக்கு முன் மாயமான சிறுமி; சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமையன்று மாயமான சிறுமியின் சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்டுள்ள கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர் நாராயணன். வாகன ஓட்டுநரான இவரது மகள் ஆர்த்தி (9) அங்குள்ள பள்ளி ஒன்றில் 5ம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த சனிக்கிழமை அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஆர்த்தி திடீரென மாயமானார். வழக்கமாக விளையாடிவிட்டு வீட்டிற்கு மகள் வருவாள் என்று எதிர்பார்த்து இருந்த பெற்றோர்கள், மகள் வராததால் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியபோதும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பொலிஸார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடும் பணியை துவக்கினர். ஆனால் சோலை நகர் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சிறுமி தனியாக நடந்து செல்லும் வீடியோ பதிவாகியிருந்தது. ஆனாலும் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸார் திணறி வந்தனர். இந்நிலையில் மாயமான சிறுமியை கண்டுபிடித்து தரக் கோரி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று புதுச்சேரியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

4 நாட்களாக தேடப்பட்டு வந்து சிறுமி சாக்கு மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

இந்த நிலையில், இன்று சிறுமி மாயமான இடத்திலிருந்து சிறிது தூரத்தில் சாக்கடை ஒன்றில் சாக்கு மூட்டை ஒன்று சந்தேகத்திற்கிடமாக கிடப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அந்த சாக்கு முட்டையை மீட்டு சோதனை செய்த போது, உள்ளே கடந்த நான்கு நாட்களுக்கு முன் மாயமான சிறுமி சடலமாக கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு பொலிஸார் அனுப்பி வைத்தனர். இதனிடையே சிறுமியின் கை கால்கள் கட்டப்பட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, பொலிஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால், அங்கு துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Exit mobile version