Site icon Tamil News

திருமலையில் பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் சிற்றூழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்க்குமாரி கோரி, திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருகோணமலை பொது வைத்திய சாலை கிழக்கு மாகாண சபைக்கு கீழ் இயங்கி வந்த நிலையில் 2008ம் ஆண்டு மத்திய அரசாங்கத்திற்கு கீழ் உள்வாங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருகோணமலை பொது வைத்திய சாலையில் கடமையாற்றிய சிற்றூழியர்கள் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் சிலர் ஓய்வூதியம் பெற்று சென்றுள்ளதாகவும் தற்போது கடமையில் உள்ள சிற்றூழியர்களுக்கு விடுமுறை, இடமாற்றம் பெற்றுச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டக் களத்திற்கு திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் இணைப்புச் செயலாளரும், திருகோணமலை நகர சபை முன்னாள் தலைவருமான இராசநாயகம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிற்றூழியர்களுடன் கலந்துரையாடுவதற்கு வருகை தந்த போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது வர வேண்டாம் என தமது எதிர்ப்பினையும் வெளியிட்டிருந்தனர்.

இதேவேளை திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது 135 சிற்றூழியர்களின் பற்றாக்குறை காணப்படுவதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்த போதிலும் இதுவரை எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இருந்த போதிலும் மிக விரைவாக சிற்றூழியர்கள் நியமிக்க படாவிட்டால் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

Exit mobile version