Site icon Tamil News

மனித உரிமைகளை வலுப்படுத்தக்கூடிய வகையில் பொருளாதார நெருக்கடியைக் கையாள வேண்டும்

சர்வதேச சட்டங்களின்படி பொருளாதார நெருக்கடியைக் கையாளும்போது மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அதனை முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கும் நிதியியல் கட்டமைப்புக்களுக்கும் இருக்கின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தேசிய வருமானத்தை ஊக்குவிக்கும் நோக்கிலான கொள்கைகள் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை பாதிக்காமல் இருப்பதையும், ஊழலுக்கு எதிரான மறுசீரமைப்புக்கள் மூலமான பொறுப்புக்கூறலையும் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

நீடிக்கப்பட்ட நிதியுதவிச் செயற்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 3 பில்லியன் டொலர்களை வழங்குவதற்குக் கடந்த 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியது.

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்டத்திலான  இணக்கப்பாடு எட்டப்பட்டு சுமார் 7 மாதங்களின் பின்னரே பணிப்பாளர் சபையினால் இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியச் செயற்திட்டத்தின் பிரகாரம் வருமானத்தை அதிகரித்தல், ஊழலை இல்லாதொழித்தல் மற்றும் சமூகப்பாதுகாப்பை உறுதிப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டிருப்பினும், அச்செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ள விதத்தை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் மேலும் பாதிப்படையக்கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது.

ஊழல் மோசடிகளும், உயர்மட்டத்தினர் பயன்பெறக்கூடிய வகையிலான வரிச்சலுகைகளுமே தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குப் பிரதான காரணமாகும்.

எனவே கடந்தகாலப் போர்க்குற்றங்கள் குறித்தும், தற்போதைய முறையற்ற நிர்வாகம் தொடர்பிலும் நாட்டுமக்களுக்குப் பொறுப்புக்கூறுவது அவசியம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியானது, இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிக்கான அடிப்படைக் காரணத்தைக் களையும் அதேவேளை, நாட்டின் மீட்சிக்கு உதவுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் சர்வதேச சட்டங்களின்படி பொருளாதார நெருக்கடியைக் கையாளும்போது மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையில் அதனை முன்னெடுக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கும் நிதியியல் கட்டமைப்புக்களுக்கும் இருக்கின்றது.

அதேபோன்று அத்தியாவசியப் பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் மக்களின் இயலுமையைக் குறைக்கக்கூடியவாறான கொள்கை உருவாக்கத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

அதேவேளை இந்நடவடிக்கைகள் செயற்திறன்மிக்கவையாக அமைவதில் சிவில் சமூக அமைப்புக்கள் முக்கிய பங்காற்ற வேண்டும்.

அத்தோடு ஊழலுக்கு எதிரான மறுசீரமைப்புக்களின் ஊடாக சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுவதையும், ஊழல்மோசடிகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் தனியார்துறை வணிகர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்படுவதையும் அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேபோன்று சமூகப்பாதுகாப்புத்துறைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு உற்பத்தி போன்றவற்றில் அரசாங்கம் அதிகளவிலான முதலீடுகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் வறிய மற்றும் நடுத்தர மக்களை வெகுவாகப் பாதிக்கும் வகையில் அமைந்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இதனை தெரிவித்துள்ளது.

Exit mobile version