Tamil News

அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ்க்கு எதிரான விவாதத்தை வலுப்படுத்த இந்திய பெண்ணின் உதவியை நாடியுள்ள ட்ரம்ப்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் களத்தில் உள்ளார். அதேநேரத்தில் ஜனநாயக கட்சி சார்பில் நிறுத்தப்பட்டிருந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் வயது முதிர்வு, தடுமாற்றம் உள்ளிட்டவற்றால் கடும் விமர்சனத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவரே அதிபர் தேர்தலிலிருந்தே விலகினார். இதையடுத்து, தற்போது ஜனநாயக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபடுவது அந்நாட்டில் வழக்கம். அந்த வகையில், தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு ட்ரம்ப் ஆகிய இருவரும் நேரடி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இந்த விவாத நிகழ்ச்சிக்கு இருவரும் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த விவாதத்தை ABC நடத்த உள்ளது. இந்த விவாத நிகழ்ச்சி இருவருக்கும் முதல்முறையாக நடைபெற இருக்கிறது.

இந்த விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸை வீழ்த்த டொனால்டு ட்ரம்ப் திட்டம் வகுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலின்போது நடைபெற்ற விவாதத்தில் கமலா ஹாரிஸை தோற்கடித்த துளசி கபார்டை, தனது பயிற்சி செசனில் இணைத்துள்ளார்.

Donald Trump ropes in Tulsi Gabbard to prepare for debate with Kamala Harris  - The Hindu

அமெரிக்காவில் விவாதத்திற்காக பயிற்சி செசன்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில் தனியார் கிளப் உள்ளிட்டவை ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில்தான் இந்து அமெரிக்கரான துளசி கபார்டு டொனால்டு ட்ரம்பின் பயிற்சி செசனில் இணைந்துள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது ஜனநாயகக் கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்த துளசி கபார்டும் தேர்தலில் போட்டியிட விரும்பினார். இதற்கென உட்கட்சி தேர்தல் 2019இல் நடந்தபோது, களத்தில் இருந்த கமலா ஹாரிஸுக்கும் துளசிக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் கமலாவைவிட சிறப்பாக செயல்பட்ட துளசி, விவாதத்தில் வெற்றி பெற்றாார். பின்னர் துளசி ஜனநாயக கட்சியில் இருந்து 2022ஆம் ஆண்டு வெளியேறினார். இந்த நிலையில் டொனால்டு ட்ரம்ப் அவரை தனது பயிற்சி செசனில் சேர்த்திருப்பதால், அவருடைய ஆலோசனைகளின்படி, கமலா ஹாரிஸை விவாதத்தில் வீழ்த்த திட்டம் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, அதிபர் ஜோ பைடனுடன் நடைபெற்ற விவாதத்தின்போது, டொனால்டு ட்ரம்ப் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அவர் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அமொிக்க நிறுவனம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பில், குடியரசு கட்சி வேட்பாளா் ட்ரம்பைவிட கமலா ஹாரிஸ் 5 மாகாணங்களில் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version