Site icon Tamil News

டிரம்ப்-ஹாரிஸ் விவாதத்துக்கு தயாராகும் பணி; கேள்விகள், அவமதிக்கும் போக்கு, நடிப்புப் பயிற்சி

செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 10ஆம் திகதி) அன்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான டோனல்ட் டிரம்ப், ஹாரிஸ் இருவரும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட உள்ளனர்.இதற்காக, ஹாரிஸ், பிட்ஸ்பர்க் நகர ஹோட்டல் ஒன்றில் தங்கி தினமும் விவாதப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

அங்கு அவருக்கு என அமைக்கப்பட்ட விவாத மேடை போன்ற ஒரு அமைப்பில் விளக்கொளி ஏற்றப்பட்டு, அதில் டோனல்ட் டிரம்ப் போன்ற ஓர் அலங்கார வடிவில் ஒருவர், டிரம்ப்பின் குணாதிசயங்களுடன் ஆலோசனை வழங்குவார்.

டிரம்பின் ஏற்பாடுகள் வித்தியாசமானவை என்று கூறப்படுகின்றன. அவருடையது, தன்னை விவாதத்துக்கு தயார்ப்படுத்திக் கொள்வது என்பதற்கு பதிலாக அவரின் அதிபர்கால சாதனைகள், கொள்கைகள் ஆகியவற்றை நினைவுகூரும் நிகழ்வுகளாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டிரம்பின் ஆலோசனைக் கூட்டங்களில் ஹாரிஸ் போல் யாரும் அவர் முன்னால் இருப்பதில்லை. அவருடைய உதவியாளர்கள் அவருக்கு எதிரே உள்ள நீண்ட மேசையில் உட்கார்ந்து அவர் மீது கேள்விக் கணைகள் தொடுப்பர். சில சந்தர்ப்பங்களில் தனது ஆலோசகர்களுக்கு அருகில் சென்று டிரம்ப் உட்காருவார் என்று கூறப்படுகிறது. டிரம்ப் இதுவரை தமது ஆலோசகர்களுடன் விரல்விட்டு எண்ணக்கூடிய சில சந்திப்புகளையே நடத்தியுள்ளதாகச் செய்தித் தகவல்கள் கூறுகின்றன. அந்தச் சந்திப்புகளில் ஒன்றை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு ஹாரிஸ் ஜனநாயகக் கட்சி மாநாட்டில் உரையாற்றியதை காணச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விவாதத்துக்கு இருதரப்பினரும் தயாராகும் போக்கு வேறு வேறாக இருப்பினும் இருவரும் விவாதம் பற்றி ஒரே கருத்துக் கொண்டிருப்பதாக இருவருக்கும் நெருக்கமான பெயர் குறிப்பிட விரும்பாத உதவியாளர்கள் கூறுகின்றனர்.

ஹாரிஸ்,டிரம்ப் இரு தரப்பினரும் இந்த விவாதம் முக்கியமான தருணத்தில் வருவதை ஒப்புக்கொள்கின்றனர். டிரம்ப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும் நிலையில், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய பல மில்லியன் கணக்கான வாக்காளர்கள் ஹாரிஸ் குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதை இந்த விவாதம்தான் முடிவு செய்யும் என்று சொல்கின்றனர்.

Exit mobile version