Site icon Tamil News

போலி காசோலையை கொடுத்து மோசடி செய்த நபர் – கைது செய்த பொலிஸார்

மோசடியான காசோலையைக் கொடுத்து வாகனமொன்றைக் கொள்வனவு செய்துவிட்டு தலைமறைவான சந்தேகநபரை பொலிஸார் நேற்றுக் கைது செய்துள்ளனர்.

இளவாலையைச் சேர்ந்தவரிடம் ஓராண்டுக்கு முன்னர் 62 லட்சம் ரூபாவுக்கு வாகனமொன்றை ஒருவர் வாங்கியுள்ளார். அதற்குரிய காசோலையை வழங்கியபோது, வங்கியில் பணம் இல்லாமையால் அது திரும்பியுள்ளது.

வாகனத்துக்குரிய பணத்தை கேட்டபோது விரைவில் அதனைத் தருவதாக் கூறி ஏமாற்றிவிட்டு, வாகனத்துடன் சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.

இந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்னர் மாவிட்டபுரத்தில் மேற்படி வாகனம் மின்ஒழுக்கு காரணமாக எரிந்துள்ளது. இதனால் வாகனத்தோடு தலைமறைவானர் பற்றிய விவரங்கள் வெளியாகின.

வாகனத்தை வாங்கியவர் நீண்ட காலமாக ஏமாற்றி தலைமறைவாகியதையடுத்து வாகனத்தை விற்றவர் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட விசேட குற்றவிசாரணை பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தினர். இதன்போது அவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version