Site icon Tamil News

சேலம்-நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் விழுந்த பாமக MLA!

நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் பாமக எம்.எல்.ஏ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மாவட்டமான சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக எம்.எல்.ஏ அருள் கலந்து கொண்டார்.

அப்போது, அங்கு வந்த திமுக தரப்பினர் எம்.எல்.ஏ அருளை மிதிவண்டி கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் மாணவர்கள் முன்பே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாங்களே மிதிவண்டி கொடுத்துக் கொள்கிறோம் என திமுகவினர் கூறப்பட்ட நிலையில், அரசு நிகழ்ச்சி என்பதால் நாங்கள் தான் கொடுப்போம் என பாமகவினர் கூறியதாக சொல்லப்படுகிறது.

பின்னர் சட்டமன்ற உறுப்பினரே மாணவர்களுக்கு மிதிவண்டியை வழங்கினார். அப்போது பேசிக் கொண்டிருக்கும் போதே எம்.எல்.ஏ அருள் மாணவர்களின் காலில் விழுந்தார்.

அவர் கூறுகையில், “நல்ல கருத்துக்களை சொல்லவேண்டிய இடத்தில் அநாகரிகமாக செயல்பாட்டுக்குள்ளாகிவிட்டோம். கண்ணு உங்க காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. நல்ல ஒழுக்கத்தை கத்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் அசிங்கப்படுத்திவிட்டார்கள். உங்களிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

மாணவ, மாணவிகளில் காலில் பாமக எம்.எல்.ஏ. அருள் விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Exit mobile version