Tamil News

பாக். நாடாளுமன்றத் தேர்தல்; இம்ரான்கான் நிறுத்திய சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலை!

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி சார்பில் சுயேச்சையாக போட்டியிட்ட வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை எந்த இடையூறுமின்றி நடைபெற்றது.இத்தேர்தலில் நாடு முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் 12.85 கோடி பேர் வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு நாடு தழுவிய பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்ததைத் தொடர்ந்து இரவே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சி ஆதரித்த வேட்பாளர்கள், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சி வேட்பாளர்களை விட முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இத்தேர்தலில் இம்ரான்கானின் பிடிஐ கட்சி வேட்பாளர்களுக்கு கிரிக்கெட் பேட் சின்னத்தை வழங்காமல் தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. இதனால் அக்கட்சி வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். ஊழல் மற்றும் ரகசிய காப்புறுதி மீறல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கான், சிறையிலிருந்தவாறே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

Pakistan election 2024 updates: Voting ends in polls marred by violence |  Elections News | Al Jazeera

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால், விரைவில் தேர்தல் வெற்றி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாகிஸ்தான் அரசியலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்), பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) என மூன்று முக்கிய கட்சிகளே தீர்மானிக்கும் சூழல் நிலவுகிறது.

336 இடங்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 266 வேட்பாளர்கள் நேரடி வாக்களிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மீதமுள்ள 70 இடங்களில் 60 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 10 இடங்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை சட்டப்பேரவையில் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில் பெரும்பான்மையைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 133 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும் தேர்தல் முடிவு ஒரு தீர்க்கமான வெற்றியாளரை வழங்காது என தேர்தல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Exit mobile version