Tamil News

சாட் நாட்டில் பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்…!

ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பதால் அந்நாட்டில் பதற்றம் நிலவி வருகிறது.

ஆப்பிரிக்காவில் உள்ள சாட் நாட்டில் கடந்த 1990ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் இத்ரீஸ் டேபி அதிபராக பொறுப்பேற்றார். சுமார் 30 ஆண்டு காலம் அவர் சாட் நாட்டின் அதிபராக ஆட்சியில் இருந்து வந்தார். கடந்த 2021ம் ஆண்டு அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய போராட்டத்தின் போது நடைபெற்ற போரில், இத்ரிஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது மகன் மஹமத் டேபி அதிபராக பொறுப்பேற்று ஆட்சியில் இருந்து வருகிறார்.

இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. சிலர் ஜனநாயக ரீதியாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வாயிலாகவும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவராக யாயா டில்லோ என்பவர் இருந்து வந்தார். இவர் அதிபர் குடும்பத்தினரின் உறவுக்காரர் ஆவர். இந்த நிலையில் வருகிற மே மாதம் சாட் நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளும் தரப்பும், எதிர் தரப்பும் தொடர்ந்து ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மீண்டும் மோதல்கள் உருவாக தொடங்கியுள்ளது.

Chad says opposition leader killed fighting security forces – DW –  02/29/2024

அந்த வகையில் புதன் கிழமை அன்று பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது யாயா டில்லோ தலைமையிலான பி.எஸ்.எஃப்., கட்சியின் உறுப்பினரான டோராபி என குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில் டோராபி உயிரிழந்தார். அவரது உடலை மீட்பதற்காக வந்தவர்கள் மீது பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலர் காயமடைந்த நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் எதிர்க்கட்சித் தலைவரான யாயா டில்லோ உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடைபெற 3 மாதங்களை உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டு இருப்பது, அந்நாட்டில் உச்சகட்ட கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Exit mobile version