Tamil News

மட்டக்களப்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு!

கூரிய ஆயுதமொன்றின் தாக்குதலுக்குட்பட்டு உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் நேற்று (8.12) மீட்கப்பட்டுள்ளதுடன் அவரது சகோதரி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர் என வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புணாணையில் வசித்து வந்த எஸ்.டி.அனுர ஜெயலால் வயது (65) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளத்தில் வசித்து வந்தவர் தமது குடும்பத்தின் உறவு துண்டிக்கப்பட்ட நிலையில் கடந்த பல வருடங்களாக புணானைப் பகுதியில் வசித்து வரும் தனது சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த 5 ஆம் திகதியன்று கீழிக்குடா மாங்கேணியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிக்குள் உயிரிழந்தவரும், அவரது சகோதரியும் கண்டியைச் சேர்ந்த பூசாரிகளுடன் தங்கி இருந்து புதையல் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தனர்.

இதேவேனை கடந்த வியாழக் கிழமை(7) காலை உயிரிழந்தவரின் சகோதரியான எஸ்.டி.சுமித்திரா ஜராங்கனி என்பவர் வெட்டுக் காயங்களுடன் அருகில் இருந்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டு வாகரை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதான வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் சம்பந்தப்ப்பட்ட பூசாரிகள் காணியின் காவலாளர் என்போர் தலைமறைவாகியுள்ளனர். புதையல் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டோர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு தொடர்பாக இவ் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதன்போது காணிக்குள் இருந்த வீட்டின் அருகாமையில் மடு வெட்டியமைக்கான தடயங்கள் மற்றும் புதையல் எடுப்பதற்கான பூசைப் வழிபாட்டு பொருட்கள்  என்பன காணப்படுவதாக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையோர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வாகரை பொலிசார் விரைந்து முன்னெடுத்துள்ளனர்.சடலம் உடற் கூற்றாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Exit mobile version