Site icon Tamil News

சீன உதிரிப்பாகங்கள் வேண்டாம்!! இந்தியா விதித்துள்ள தடை

சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை உள்நாட்டு இராணுவ ஆளில்லா விமான உற்பத்தியாளர்கள் பயன்படுத்த தடை விதிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக உள்நாட்டு இராணுவ ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ட்ரோன்களின் தகவல் தொடர்பு செயல்பாடுகள், கேமராக்கள், ரேடியோ டிரான்ஸ்மிஷன்கள் மற்றும் செயல்பாட்டு மென்பொருளை உளவுத்துறை சேகரிப்பதற்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை பயன்படுத்தலாம் என இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

2020 முதல் கண்காணிப்பு ஆளில்லா விமானங்களுக்கு படிப்படியாக இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது, மேலும் இது இராணுவ டெண்டர்கள் மூலம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ட்ரோன் டெண்டர்களைப் பற்றி விவாதிக்க பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களில், “இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் உபகரணங்கள் அல்லது துணை கூறுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” என்று இந்திய இராணுவ அதிகாரிகள் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் சில ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் தொடர்பான உபகரணங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அறிவித்த சீனாவின் வர்த்தக அமைச்சகம், இந்தியாவின் முடிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்று அது கூறியது.

2019 ஆம் ஆண்டில் சீனத் தயாரிப்பான ட்ரோன்கள் மற்றும் உபகரணங்களை பென்டகன் வாங்கவோ பயன்படுத்தவோ அமெரிக்க காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

2023-24ல் இராணுவ நவீனமயமாக்கலுக்கு இந்தியா 1.6 டிரில்லியன் ரூபாய் (19.77 பில்லியன் டாலர்) ஒதுக்கியுள்ளதாகவும், 75% உள்நாட்டுத் தொழிலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் இராணுவத்திற்கு சிறிய ஆளில்லா விமானங்களை சப்ளை செய்யும் பெங்களூருவை தளமாகக் கொண்ட நியூஸ்பேஸ் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜிஸின் நிறுவனர் சமீர் ஜோஷி, விநியோகச் சங்கிலியில் 70% பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன என்று குறிப்பிடுகிறார்.

சில வகையான ஆளில்லா விமானங்களை தயாரிப்பதற்கான உதிரிபாகங்கள் மற்றும் முழுமையான அமைப்புகளுக்கு வெளிநாட்டு உற்பத்தியாளர்களை இந்தியா நம்பியுள்ளது.

Exit mobile version