Site icon Tamil News

சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு வரியை மும்மடங்காக்கும் நியூசிலாந்து

நியூசிலாந்து, சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு வரியை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரிக்கவிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 3) அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சுற்றுலாத்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது. வரி உயர்த்தப்படுவது, சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதற்கு இடையூறாக இருக்கும் என்ற அச்சம் சுற்றுலாத் துறையினரிடையே நிலவுகிறது.

வரும் அக்டோபர் மாதம் 01ம் திகதி முதல் அனைத்துலக சுற்றுப்பயண, பாதுகாப்பு, சுற்றுலாக் கட்டணத்தை 35 நியூசிலாந்து டொலரிலிருந்து 100 நியூசிலாந்து டொலருக்கு உயர்த்தப்போவதாக நியூசிலாந்து அரசாங்கம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மற்ற பிரபல சுற்றுலாத்தலங்களைப் போல் நியூசிலாந்தும் சுற்றுலாப்பயணிகளால் இயற்கைச் சூழலுக்கு ஏற்படும் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் வருகை தரும் சுற்றுலாப்பயணிகளைக் கையாள அந்நாடு சிரமப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து, 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் 35 நியூசிலாந்து டொலராக சுற்றுப்பயண, பாதுகாப்பு, சுற்றுலா வரிக் கட்டணத்தை விதித்தது. ஆனால், அந்தக் கட்டணம் இத்தனை சுற்றுலாப்பயணிகள் தொடர்பான எல்லா செலவுகளுக்கும் போதுமானது அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டணம் போட்டித்தன்மை மிகுந்த சூழலுக்கு உகந்தது என்றும் நியூசிலாந்து தொடர்ந்து பிரபல சுற்றுலாத்தலமாக விளங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்கம் குறிப்பிடடது.

Exit mobile version