Site icon Tamil News

பப்புவா கிளர்ச்சியாளர்களால் விடுவிக்கப்பட்ட நியூசிலாந்து விமானி

இந்தோனேசியாவில் அரசுக்கு எதிராக மேற்கு பப்புவா தேசிய தாராளவாத ராணுவம் என்ற பெயரிலான கிளர்ச்சியாளர்கள் படை செயல்பட்டு வருகிறது.

அந்த கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால், அவர்களை ஒடுக்க அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எனினும், நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என தொடர்ந்து அந்த கிளர்ச்சி படை கோரிக்கை வைத்ததை அரசு புறக்கணித்தன.

இதையடுத்து, நியூசிலாந்து நாட்டை சேர்ந்த விமானி பிலிப் மெர்தன்ஸ் என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுசி ஏர் வர்த்தக விமானத்தில் டுகா பகுதியில் அமைந்த பாரோ விமான நிலையத்தில் சென்று இறங்கிய போது கிளர்ச்சியாளர்கள் படை அவரை பணய கைதியாக பிடித்து சென்றது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை மூலம் 19 மாதங்களுக்கு பின்னர் விமானி பிலிப் இன்று விடுதலை செய்யப்பட்டதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிலிப் இன்று அதிகாலை இந்தோனேசிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கூட்டு பாதுகாப்புப்படை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து உடல்நல பரிசோதனைக்காக மெஹர்டென்ஸ் சுரங்க நகரமான டிமிகாவிற்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version