Site icon Tamil News

அரசு அதிகாரிகளுக்கு புதிய விடுப்பு முறை

குழந்தையை தத்தெடுக்கும் நோக்கத்திற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கையை பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

குழந்தையொன்றை தத்தெடுப்பதை விசேட சந்தர்ப்பமாக கருதி அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு தொடர்ச்சியாக விடுமுறை வழங்குமாறு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

விடுப்புக்கு விண்ணப்பிக்க, தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் வயது 10 மாதங்களுக்கு குறைவாக இருக்க வேண்டும் மற்றும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் உண்மையான நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை கூறுகிறது.

இதன்படி நிரந்தர அரச உத்தியோகத்தர் ஒருவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, அரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு மற்றும் சம்பளமில்லாத விடுமுறை என அதிகபட்சமாக 04 மாதங்களுக்கு விடுமுறை எடுக்க முடியும்.

அதேபோன்று நிரந்தர அரச உத்தியோகத்தர் ஒருவர் தத்தெடுக்கப்பட்ட பிள்ளையை தத்தெடுப்பதற்கு 03 வேலை நாட்கள் கொண்ட விசேட மகப்பேறு விடுமுறையையும் பெற்றுக்கொள்ள முடியும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை இந்த ஆண்டு ஜூன் 26 முதல் அமலுக்கு வருகிறது.

Exit mobile version