Tamil News

நாடாளாவிய ரீதியில் ஸ்தம்பிதம் அடைந்த சுகாதார சேவைகள் : மக்கள் அவதி!

தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதால் திட்டமிட்டபடி 24 மணித்தியால வேலைநிறுத்தத்தை தொடரவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன மற்றும் பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தொழிற்சங்க பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமான சுகாதார பணிப்புறக்கணிப்பு நாளை காலை 6.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை   சுகாதார ஊழியர்களின் போராட்டத்திற்க ஆதரவு தெரிவித்து இன்று (16.01.2024) காலை 6.30 மணி மணியிலிருந்து நாளை (17.01.2024) காலை 6.30 மணி வரை வேலை நிறுத்த போராட்ட நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பும் , கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் வவுனியாவில் உள்ள வைத்தியசாலை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சேவைகள் தவிர்ந்த ஏனைய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சேவையை தவிர ஏனைய அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

இதன் காரணமாக தூர இடங்களில் இருந்து வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்தனர்.

அதேபோல்  மூதூர் தள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று செவ்வாய்கிழமை பணிபகிஷ்ரிப்பில் ஈடுபட்டனர்.

இவ் பணிபகிஷ்கரிப்புக் காரணமாக மூதூர் தள வைத்தியசாலையின் நாளாந்த செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவு வழமைபோன்று இயங்கியது.

 

Exit mobile version