Site icon Tamil News

மாமியார் படுகொலை – பிள்ளைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்த யாழ்ப்பாண பெண்

வயோதிப மாமியாரை கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தனது குழந்தைகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பெண்ணை இரண்டரை மணித்தியால போராட்டத்தின் பின்னர் இன்று (07) அதிகாலை கம்பளை ஹெட்காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது உலப்பனை தோட்டத்தில் வசித்துவந்த ஐந்து பிள்ளைகளின் தாயான ஜோதி என்ற 78 வயது பெண்ணே மருமகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயது சந்தேக நபரான குறித்த பெண் திருமணம் முடித்து உலப்பனை தோட்டத்தில் கொலை செயப்பட்ட மாமியாருடன் தனது 7 மற்றும் 4 வயது பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேற்படி சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

இதில் மூர்க்கத்தனமாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடிய வயோதிபப் பெண்ணை அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்து விட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

பொலிஸார் இரவு 1 மணியளவில் ஸ்தலத்திற்கு விரைந்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபரான பெண் வீட்டினை மூடிக்கொண்டு தனது குழந்தைகளின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி பொலிஸாரை நெருங்க விடாமல் தடுத்துவந்த நிலையில் பொலிஸார் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிவந்த சந்தேக நபரான பெண்ணின் கணவருடன் தொடர்புகொண்டு பேசவைத்து இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதிவான் காந்திலதா மேற்கொண்டுள்ளதோடு ஹெட்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version