Site icon Tamil News

சந்தேகத்தின்பேரில் இரு இளைஞர்களை வீடு புகுந்து தாக்கிய 50க்கும் மேற்பட்டோர்

புத்தூர் கலை ஒளி கிராமத்தில் இளைஞர்கள் இருவரின் வீடுகளுக்குள் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதுடன் பெறுமதியான பொருள்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

பெண்களின் ஒளிப்படங்களை கணினியில் கிராபிக் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர் என்ற சந்தேகித்த இளைஞர் இருவரின் வீடு மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் இளைஞர்கள் இருவரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காயமடைந்தனர் என்றும் பொலிஸார் கூறினர்.

புத்தூர் கலை ஒளி கிராமத்தைச் சேர்ந்த பெண்களின் படங்களை கணினியில் கிராபிக் செய்து அசிங்கமாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டன என்று அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.அவை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இளைஞர்கள் இருவர் மீது சந்தேகம் கொண்டு அவர்களின் வீடுகளுக்குள் நேற்றிரவு 11.30 மணியளவில் புகுந்த 50இற்கும் மேற்பட்டோர் அவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

அத்துடன், வீடுக்குள் இருந்த பெறுமதியான பொருள்கள் மற்றும் வீட்டு வளாகத்திலிருந்த வாகனங்களும் அடித்து சேதப்படுத்தப்பட்டன.காயமடைந்த இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை தடுத்த போதும் அங்கு வருகை தந்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version