Tamil News

முதலில் மணிரத்னம் என்னிடம் தான் வந்தார்… பிறகு நடந்தது என்ன? ஓபனாக பேசிய மோகன்

மோகன் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது கலவையான விமர்சனங்களையே கொடுத்தனர். அடுத்ததாக விஜய்யுடன் அவர் நடித்திருக்கும் GOAT படம் வெளியாகவிருக்கிறது.

இந்தச் சூழலில் மணிரத்னத்திடம் மோகன் பேசிய விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் கோலோச்சியிருந்த காலம் அது. அப்போது பாலுமகேந்திரா கோகிலா என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தில்தான் மோகன் முதன்முறையாக சினிமாவில் அறிமுகமானார். அதில் கமல் ஹாசன், ஷோபா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் மெகா ஹிட்டானது.

அதுமட்டுமின்றி மோகனுக்கும் நல்லதொரு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்துக்கு பிறகு மலையாளத்தில் அறிமுகமான அவர்; பின்னர் மூடுபனி படத்தின் மூலம் தமிழில் இண்ட்ரோ ஆனார்.

மூடுபனி படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மோகனுக்கும் சிறந்த அடையாளத்தை தந்தது. இதன் காரணமாக முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த ஹீரோவானார் மோகன். அதனைத் தொடர்ந்து தமிழில் அவர், நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, லாட்டரி டிக்கெட், கோபுரங்கள் சாய்வதில்லை என்று வரிசையாக படங்களில் நடித்தார். இதனால் அவர் பிஸியான நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார்.

தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஒன்று சூப்பர் ஹிட்டாகின அல்லது சுமார் ஹிட்டாகின. பிறகு லெஜெண்ட் இயக்குநர்களின் பார்வை மோகன் மீது திரும்பியது. தொடர்ந்து பாலுமகேந்திரா இயக்கத்தில் ரெட்டை வால் குருவி, மணிரத்னம் இயக்கத்தில் மௌன ராகம், மணிவண்ணன் இயக்கத்தில் நூறாவது நாள், ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் மெல்ல திறந்தது கதவு என்று அவர் நடித்ததெல்லாம் ஹிட்டாகின. குறிப்பாக நல்ல நடிகர் என்ற பெயரையும் பெற்றார்.

இப்படி அவரது கரியர் பீக்கில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சறுக்கல் ஏற்பட்டு; ஆள் காணாமல் போனார். பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் விஜய் நடித்திருக்கும் GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர்; ஹரா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

குறிப்பாக நேற்று வெளியான கோட் பட ட்ரெய்லரில் மோகன் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இந்நிலையில் மோகன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஞ்சலி படம் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், “அஞ்சலி படத்தில் மணிரத்னம் என்னைதான் ஹீரோவாக நடிக்க வைக்க எண்ணினார். அந்தப் படத்தின் கதையையும் என்னிடம் சொன்னார். கதையில் அஞ்சலி என்ற மாற்றுத்திறனாளி சிறுமியை கணவனும், மனவியும் தனியறையில் வைத்து வளர்ப்பது போன்று இருந்தது. அதை கேட்டுவிட்டு அது எப்படி ஒரு மகளை தனியறையில் வளர்ப்பார்கள். அது எனக்கு உடன்படாத விஷயமாக இருந்தது. எனவே மணிரத்னத்திடம் நோ சொல்லிவிட்டேன்” என்றார்.

Exit mobile version