Tamil News

அதிவிரைவு ரயில் திட்டத்துக்குச் சீனாவிடம் நிதி கோரவுள்ள மலேசிய மாமன்னர்

மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான அதிவிரைவு ரயில் திட்டத்துக்காகச் சீன முதலீட்டாளர்களிடம் நிதி கோரத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனத்தின் முதலீடுகளை அவர் கோருவார் என்று தகவலறிந்தோர் கூறினர்.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று மாமன்னர், செப்டம்பர் 19ஆம் திகதி முதல் நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு பெய்ஜிங் சென்றுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது இப்பயணத்தின் நோக்கம்.மாமன்னருடன் சென்றுள்ள பேராளர் குழுவில் அதிவிரைவு ரயில் திட்டத்துக்காக முதற்கட்டத் தெரிவு செய்யப்பட்டுள்ள ‘ஒய்டிஎல்’ நிறுவனப் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.அதிவிரைவு ரயில் திட்டத்தை நீண்டகாலமாகவே மாமன்னர் ஆதரித்துவந்துள்ளார்.

கடந்த டிசம்பரில் தனியார் வணிகக் கூட்டமைப்பு இத்திட்டத்திற்கு நிதி வழங்கக்கூடும் என்றும் 30 ஆண்டுகளுக்குச் செயல்படுத்திய பின்னர் அக்கூட்டமைப்பு அதிவிரைவு ரயில் செயல்பாட்டை மலேசிய அரசாங்கத்திடம் வழங்கும் என்றும் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியிருந்தார்.

Malaysia's King to seek funds for high-speed rail on China visit, sources  say | The Straits Times

மாமன்னரின் அரண்மனை, சீன வெளியுறவு அமைச்சு, ‘ஒய்டிஎல்’ நிறுவனப் பிரதிநிதி, மலேசியப் போக்குவரத்து அமைச்சு ஆகிய தரப்புகள், மாமன்னர் சீனாவிடம் நிதி கோருவது குறித்துக் கருத்துரைக்கவில்லை.மாமன்னருடன் சென்றுள்ள பேராளர் குழுவில் மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக்கும் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டிறுதிக்குள் அதிவிரைவு ரயில் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து மலேசிய அமைச்சரவை முடிவு செய்யும் என்று ஜூலை மாதம் புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் லோக் குறிப்பிட்டிருந்தார்.அதிவிரைவு ரயில் சேவை செயல்படத் தொடங்கினால், கோலாலம்பூரிலிருந்து 90 நிமிடங்களில் சிங்கப்பூர் வந்தடைய இயலும். இத்திட்டத்திற்கு 100 பில்லியன் ரிங்கிட் (S$31 பில்லியன்) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

செலவு அதிகம் எனக் கூறி 2018ஆம் ஆண்டு மலேசியாவின் அப்போதைய பிரதமர் மகாதீர் முகமது இத்திட்டத்தைத் தள்ளிவைத்தார். பின்னர் 2021ஆம் ஆண்டு இது ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.மக்களின் வரிப்பணம் பயன்படுத்தப்பட மாட்டாது என்ற நிபந்தனையுடன் 2023ல் பிரதமர் அன்வாரின் அரசாங்கம் இத்திட்டத்திற்குப் புத்துயிர் கொடுத்தது.திட்டம் நடப்புக்கு வரச் சிங்கப்பூரின் ஒப்புதலும் அவசியம். ஜூன் மாதம் இதன் தொடர்பில் கருத்துரைத்த பிரதமர் லாரன்ஸ் வோங், இத்திட்டம் குறித்தப் புதிய பரிந்துரைகளை வரவேற்பதாகக் கூறினார்.

Exit mobile version