Site icon Tamil News

சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி பேசும் லூஸி

பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளான பெண் பிள்ளைகள் சமூகத்தில் தொடர்ந்து வாழும் போது எதிர்நோக்கும் பிரச்சனைகள் , சவால்கள் பற்றி லூஸி திரைப்படம் ஊடாக பேசியுள்ளோம் என லூஸி திரைப்பட இயக்குனர் ஈழவாணி தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
லூஸி திரைப்படத்தை திரையிட தயாராக இருக்கிறோம். யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் எதிர்வரும் 17ஆம் திகதி மாலை 3.45 மணியளவில் ஒரு காட்சியும், மாலை 05.45 மணியளவில் ஒரு காட்சியுமாக இரண்டு காட்சிகளை திரையிடவுள்ளோம்.

வவுனியாவில் 18ஆம் திகதியும் கொழும்பில் 24ஆம் திகதி திரையிட திட்டமிட்டு உள்ளோம். அவற்றினை தொடர்ந்து மன்னார் , மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலும் திரைப்படத்தை திரையிட திட்டமிட்டு உள்ளோம்.

லூஸி திரைப்படம் பெண்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் பேசவுள்ள படம். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை. சிறுவர் துஸ்பிரயோகம் , பாலியல் துஸ்பிரயோகங்கள் அவற்றினை எதிர்கொண்டு சமூகத்தில் வாழுபவர்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார்கள் என்பது தொடர்பிலும் பேசியுள்ளோம்.

பல விடயங்களை நாங்கள் பிள்ளைகளிடம் மறைக்கிறோம். அவற்றை வெளிப்படையாக பேசினால் பிள்ளைகள் கெட்டு விடுவார்களோ பிள்ளைகள் தப்பான வழியில் சென்று விடுவார்களோ என பயப்படுகிறோம். அதனால் பிள்ளைகளுக்கு பலதை சொல்லிக்கொடுப்பது இல்லை. தவறான தொடுகை எது என்பதனை பிள்ளைகள் அறிந்து இருக்க வேண்டும். கட்டாயம் பெண் பிள்ளைகளுக்கு அவை தெரிந்து இருக்க வேண்டும்.

இந்த படத்தினை பார்த்து உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். இந்த படத்தில் 09 க்கும் மேற்பட்ட பெண்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அனைவருமே எங்கள் கலைஞர்கள்.

நம்ம நாட்டு படைப்புக்களை நாம் கொண்டாட வேண்டும். எங்கள் உழைப்புக்களை நாங்கள் கொடுத்துள்ளோம். திரைப்படத்தினை திரையரங்கில் பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். என மேலும் தெரிவித்தார்.

Exit mobile version