Site icon Tamil News

வடகலிஃபோர்னியாவில் பரவி வரும் மிகப் பெரிய காட்டுத் தீ; ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தை மிகப் பெரிய காட்டுத் தீ உலுக்கி வருகிறது.வடகலிஃபோர்னியாவில் காட்டுத் தீ மிக வேகமாகப் பல இடங்களுக்குப் பரவி வரும் நிலையில், அப்பகுதியிலிருந்து 4,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்னர்.

இது ஒருபுறம் இருக்க, தீயை அணைக்க தீயணைப்பாளர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.ஆனால் கடும் வெப்பம், பலத்த காற்று காரணமாகத் தீ அணைப்புப் பணிகள் சவால்மிக்கதாக உள்ளன என அதிகாரிகள் ஜூலை 26ஆம் திகதியன்று தெரிவித்தனர்.

இந்தக் கோடைக்காலத்தில் இதுவே கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான காட்டுத் தீ.ஜூலை 26ஆம் திகதி நிலவரப்படி, ஒரே இரவில் 97,000 ஹெக்டர் பரப்பளவு நிலம் தீக்கு இரையாகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

“மணிக்கு 4,000லிருந்து 5,000 ஹெக்டர் பரப்பளவு நிலத்துக்கு காட்டுத் தீ மிக விரைவாகப் பரவுகிறது,” என்று கலிஃபோர்னியா தீயணைப்புத்துறை கூறியது.தீயணைப்புப் பணிகளில் ஏறத்தாழ 1,700 தீயணைப்பாளர்கள் ஈடுபட்டு வரும்போதிலும் காட்டுத் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிவதாகத் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் தீயணைப்பாளர்களுக்கு உதவும் வகையில் கூடுதல் வளங்கள் அனுப்பிவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.காட்டுத் தீ காரணமாக இதுவரை 134 கட்டடங்கள் சேதமடைந்துவிட்டதாக அதிகாரிகள் கூறினர்.இழப்பு அதிகமாக இருந்தாலும் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காட்டுத் தீ ஜூலை 24ஆம் திகதியன்று சிக்கோ எனும் இடத்தில் தொடங்கியதாகவும் சில மணி நேரத்திலேயே அது பல இடங்களுக்குப் பரவி கடும் சேதம் விளைவித்ததாகவும் அப்பகுதியின் தீயணைப்புத்துறைத் தலைவர் கெரட் ஸ்ஜோலன்ட் கூறினார்.இரண்டே நாள்களில், கலிஃபோர்னிய வரலாற்றில் ஆக மோசமான காட்டுத் தீ சம்பவங்களில் 20வது இடத்தை அது பிடித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தீப்பற்றி எரியும் கார் ஒன்றைப் பள்ளத்தாக்கிற்குள் தள்ளிவிட்டு காட்டுத் தீ ஏற்படக் காரணமாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 42 வயது நபரை ஜூலை 25ஆம் திகதியன்று அமெரிக்கக் காவல்துறை கைது செய்தது.

Exit mobile version