Tamil News

கொக்குதொடுவாய் மனித புதைகுழி: ஐந்து மனித எச்சங்கள்- துப்பாக்கிச்சன்னங்கள் மீட்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய அகழ்வுப் பணியின் போது ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த செப்ரெம்பர் மாதம் 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்ரெம்பர் (15) வரை அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தது.

இவ் அகழ்வு பணியில் இன்றுடன் 24 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையிலும், துப்பாக்கி சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்க தகடு, உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது. நாளை நான்காம் நாள் அகழ்வு பணி இடம்பெறவுள்ளது.

அத்துடன் நேற்றையதினம் மீட்கப்பட்ட இலக்கத்தகட்டில் த.வி.பு – இ0043, O+ எனவும் மற்றுமொரு குறியீடும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version